சென்னையில் பரபரப்பு: காதலித்து மதம் மாற்றி ஏமாற்றிய இளைஞரின் திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண்! ஆய்வாளர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக தவெக எம்.எல்.ஏ வாக்குவாதம்!
சென்னை: சென்னையில் காதலித்து, மதம் மாற்றி ஏமாற்றிய இஸ்லாமிய இளைஞரின் திருமணத்தை பாதிக்கப்பட்ட இளம்பெண் தடுத்து நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வடபழனியில் உள்ள வணிக வளாகம் (மால்) ஒன்றில் வேலை செய்தபோது, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண்ணை மதம் மாற்றிய சையது இப்ராஹிம், அவரிடமிருந்து சுமார் 50 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்தப் பெண்ணை ஏமாற்றிவிட்டு சையது இப்ராஹிம் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்றுள்ளார். ராயபுரத்தில் இந்தத் திருமணம் நடைபெற இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தனது ஆதரவாளர்களுடன் சென்று திருமணத்தைத் தடுத்து நிறுத்தி நீதி கேட்டுப் போராடினார். இதுகுறித்த தகவலறிந்து வந்த ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி, சையது இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தரதரவென்று இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், அங்கு வந்த சமூக ஆர்வலர் வளர்மதியை ஒருமையில் பேசியதுடன், பெண்ணுக்கு ஆதரவாக வந்த அப்துல் கரீம் என்பவரை முகத்தில் கடுமையாகத் தாக்கியதாகவும், இதில் மயங்கி விழுந்த அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த விவகாரம் குறித்து அறிந்த ராயபுரம் தவெக எம்.எல்.ஏ விஜய் தாமு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாகக் காவல் நிலையம் சென்று, “பொதுமக்களை அடிக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என காவல் ஆய்வாளரிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். “பணம் வாங்கிக் கொண்டு ஒருதலைப்பட்சமாகச் செயல்படாதீர்கள்” என்று எம்.எல்.ஏ அறிவுறுத்திய போது, ஆய்வாளர் அவரிடமே மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். காவல்துறையினரின் இந்த ஒருதலைப்பட்சமான நடத்தை மற்றும் வாக்குவாதம் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




