2031-ல் பாஜக ஆட்சி என்ற இலக்கில் செயல்படுவோம்; தவெக அரசு மீது தமிழிசை சௌந்தரராஜன் கடுமையான விமர்சனம்!
கோவை: “திமுக ஆட்சியில் நடந்த குற்றச் சம்பவங்கள், தற்போதுள்ள தவெக ஆட்சியில் இரட்டிப்பாகி உள்ளன” என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் ‘பிஎம்ஸ்ரீ’ திட்டம் குறித்து ஆழமாகச் சிந்திக்காமல், கொள்கை முடிவு என்று அமைச்சர்கள் பொத்தாம்பொதுவாகப் பேசுவது நல்லதல்ல என்று குறிப்பிட்டார். மேலும், முதலமைச்சர் அறையிலேயே ரீல்ஸ் எடுக்கப்படுவதாகச் சாடிய அவர், “நாங்கள் ரீல்ஸை நம்புபவர்கள் கிடையாது, ரியல் (உண்மை) வாழ்க்கையை நம்புபவர்கள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், சனாதன தர்மம் குறித்து ஆதவ் அர்ஜூனா மற்றும் முஸ்தபா ஆகியோர் பேசி வருவதைச் சுட்டிக்காட்டி, இதனை முதலமைச்சர் உடனடியாகக் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஹிந்துக்களின் உணர்வுகளைத் தொடர்ந்து புண்படுத்திக் கொண்டிருந்தால், தவெக-விற்கு வாக்களித்த மக்களே வருத்தப்படும் சூழல் உருவாகும் என்றும் எச்சரித்தார். இறுதியாக, “பாஜக மீண்டும் வீரியத்துடன் மீண்டு எழும்; வரும் 2031-ஆம் ஆண்டில் தமிழகத்தில் எங்கள் ஆட்சி என்ற இலக்கை நோக்கி உறுதியுடன் செயல்படுவோம்” என்றும் அவர் தெரிவித்தார்.




