சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற கொலிஜியம் அதிரடி ஒப்புதல்!
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலவி வரும் நீதிபதிகள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், 10 வழக்கறிஞர்கள் மற்றும் 9 நீதித்துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 19 பேரைப் புதிய நீதிபதிகளாக நியமிப்பதற்கான பரிந்துரைக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் தனது அதிகாரப்பூர்வ ஒப்புதலை அளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மொத்தம் 75 நீதிபதிகள் பணியிடங்களில், தற்போது 23 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இந்த முக்கிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2025-ம் ஆண்டு பல்வேறு கட்டங்களாகப் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
அதன்படி, மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ். அல்லி மற்றும் மாவட்ட நீதிபதிகளான பி. முருகன், எம்.டி. சுமதி, சி. திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன், என். குணசேகரன் ஆகிய 9 நீதித்துறை அதிகாரிகளின் பெயர்கள் கொலிஜியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
பரிந்துரைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள்: இதேபோல், வழக்கறிஞர்கள் தரப்பில் இருந்து என். ரமேஷ், ஜி.கே. முத்துக்குமார், ஆர். ராஜேஷ் விவேகானந்தன், சங்கரநாராயணன் ரவிக்குமார், நாகராஜன் திலீப்குமார், இ. மனோகரன், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன், ரஜினிஷ் பதியில், கே. அப்பாதுரை மற்றும் ஆர். அனிதா ஆகிய 10 பேரின் பெயர்களுக்கும் கொலிஜியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
புதுடெல்லியில் நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்த 19 பேரின் பெயர்களும் இறுதி செய்யப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக, இவர்களின் நியமனத்திற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், குடியரசுத் தலைவர் புதிய நீதிபதிகள் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ உத்தரவை (Warrant of Appointment) பிறப்பிப்பார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகள் மேலும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




