கெலமங்கலம் பட்டாளம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் அமைந்துள்ள, மிகவும் பிரசித்தி பெற்ற கிராம தேவதை கடவுளான ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளான நேற்று, மூலவர் அம்மனுக்கு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, வண்ணமயமான மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான பிரம்மாண்ட திருத்தேரோட்டம் இன்று மிக விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, இன்று அதிகாலை உற்சவ அம்மன் மற்றும் மூலவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனைகள் காட்டப்பட்டன. பின்னர், உற்சவ அம்மன் திருக்கொவிலின் முன்பு மலர்களால் தத்ரூபமாக அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த பிரம்மாண்ட திருத்தேரில் எழுந்தருளினார்.
பக்தி கோஷங்களுடன் தேரோட்டம்: சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகளுக்குப் பின், கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஓம் சக்தி… பராசக்தி…” என்ற பக்தி கோஷங்களுடன் வடம்பிடித்துத் தேரை இழுத்தனர். திருத்தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்து இறுதியாக நிலையை அடைந்தது. இத்திருவிழாவை முன்னிட்டு, நகரின் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்குத் தடையின்றி அன்னதானம், நீர்மோர் மற்றும் பானகம் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த விழாவில் கெலமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு அம்மனைத் தரிசித்து அருள் பெற்றனர்.






