சிஎஸ்கேவிற்கு பிளே ஆப் வாய்ப்பு இன்னும் இருக்கா?… தகுதி பெற என்னென்ன நடக்கணும்? – முழு விவரம்!
சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. டாப் 4 இடத்திற்குள் நுழைந்து பிளே ஆப் வாய்ப்பை பலப்படுத்த இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த சென்னை அணி, ரன்களைக் குவித்தும் வெற்றியைத் தவறவிட்டது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கார்த்திக் சர்மா, டெவால்ட் பிரேவிஸ் மற்றும் சிவம் துபே ஆகியோரின் சிறப்பான பங்களிப்பால் 20 ஓவர்களில் 180/7 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணி, ஆரம்பத்திலேயே டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹென்றிச் கிளாசன் மற்றும் இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். இறுதிக்கட்டத்தில் ஐதராபாத் அணி சில விக்கெட்டுகளை இழந்தாலும், கிளாசன் – கிஷன் அமைத்த பலமான அடித்தளத்தால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
புள்ளிப்பட்டியலில் சரிவு – ஆனால் வாய்ப்பு இருக்கிறது!
இந்தத் தோல்வியின் மூலம் சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திலிருந்து 6-வது இடத்திற்குச் சரிந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னைக்கு முன்னே சென்றுள்ளது. தற்போது சென்னை அணி 13 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் உள்ளது. இருப்பினும், சிஎஸ்கே தொடரிலிருந்து இன்னும் அதிகாரபூர்வமாக வெளியேறவில்லை; அவர்களின் பிளே ஆப் வாய்ப்பு இன்னும் உயிர்ப்புடன் தான் உள்ளது.
சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில், வரும் 21-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் சென்னை அணி கட்டாயம் வென்றாக வேண்டும். அதுமட்டுமில்லாமல், மற்ற அணிகளின் போட்டி முடிவுகளும் சென்னைக்கு சாதகமாக வர வேண்டும்.
சிஎஸ்கே பிளே ஆப் செல்ல நடக்க வேண்டிய 4 முக்கிய கணக்குகள்:
தற்போது 4-வது இடத்திற்கான போட்டியில் சென்னை உட்பட 5 அணிகள் முட்டி மோதி வரும் நிலையில், சிஎஸ்கே குஜராத்தை வீழ்த்துவதுடன் பின்வரும் விஷயங்கள் நடக்க வேண்டும்:
- பஞ்சாப் தோல்வி: 13 புள்ளிகளுடன் இருக்கும் பஞ்சாப் அணி, லக்னோ அணிக்கு எதிரான தனது கடைசி போட்டியில் கட்டாயம் தோற்க வேண்டும்.
- ராஜஸ்தான் பின்னடைவு: ராஜஸ்தான் அணி தனக்கு மீதமுள்ள 2 போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது தோற்க வேண்டும்.
- கொல்கத்தா சரிவு: கொல்கத்தா அணிக்கு இன்னும் 2 போட்டிகள் (மும்பை மற்றும் டெல்லிக்கு எதிராக) மீதமுள்ளன. இதில் ஒன்றில் அவர்கள் கட்டாயம் தோற்க வேண்டும்.
- நெட் ரன் ரேட் (NRR): டெல்லி அணி தனது போட்டியில் வெற்றி பெற்றாலும், அவர்களின் நெட் ரன் ரேட் சென்னையின் ரன் ரேட்டை விட அதிகமாகாமல் இருக்க வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால், சென்னை அணி தனது அடுத்த போட்டியில் குஜராத்தை வீழ்த்திவிட்டு, ‘விதி யாரோ… முடிவு யாரோ…’ என்ற பாணியில் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி முடிவுகளுக்காகக் காத்திருக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.






