புதிதாக யார் ஆட்சி அமைத்தாலும் கால அவகாசம் தேவை; விஜய் திட்டங்களை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது – துரை வைகோ எம்.பி. பேட்டி!
திருச்சி:
புதிதாக யார் ஆட்சி அமைத்தாலும் அவர்களுக்குச் செயல்படக் தகுந்த கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழல் குறித்துப் பேசினார். அப்போது, “புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்வர் விஜய்யின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன் குறித்து இன்னும் 6 மாதங்கள் கழித்துத்தான் முழுமையாக ஒரு கருத்தைக் கூற முடியும்” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் தொடர்ந்து பேசிய துரை வைகோ, “அரசு குதிரை வேகத்தில் செயல்படும் என முதல்வர் விஜய் தெளிவாகக் கூறியுள்ளார். எனினும், தற்போதைய பொருளாதாரச் சூழலில் அவர் தனது வாக்குறுதிகளையும் திட்டங்களையும் எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக, மகளிருக்கான மாத உதவித்தொகை ₹2,500 படிப்படியாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அவர் இதனை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஒருவேளை, மக்கள் நலன் சார்ந்த இந்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றத் தவறினால், மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் நிச்சயம் தட்டிக்கேட்போம், கேள்வி எழுப்புவோம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.




