அதிமுகவில் அடுத்த அதிரடி: “சி.வி.சண்முகம் தரப்பு கேட்டால் கையெழுத்து போட வேண்டாம்” – நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு!
சென்னை:
அதிமுகவில் உட்கட்சி விவகாரங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், பொதுக்குழுவை கூட்டுவதற்காக சி.வி.சண்முகம் தரப்பினர் கையெழுத்து கேட்டால் நிர்வாகிகள் யாரும் போட வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கவும், கட்சியின் அவசரப் பொதுக்குழுவைக் கூட்ட வலியுறுத்தியும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களை நேரில் சந்தித்து, பொதுக்குழுவை கூட்டுவதற்கான ஆதரவு கையெழுத்துகளைப் பெறும் தீவிர முயற்சியில் சி.வி.சண்முகம் தரப்பு இறங்கியுள்ளது.
இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், வளர்மதி, கோகுல இந்திரா, பி.வி.ரமணா மற்றும் கட்சியின் பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து தன்னைச் சந்திக்க வந்த நிர்வாகிகளிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் பொதுக்குழு கூட்டுகிறோம் என்ற பெயரில் கையெழுத்து வேண்டி அணுகினால், யாரும் கையெழுத்திட வேண்டாம்” எனத் திட்டவட்டமாகக் கேட்டுக்கொண்டார். மேலும், தமக்கு ஆதரவாக உள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் எவ்வித குழப்பமும் இன்றி, அவரவர் சார்ந்த மாவட்டங்களில் கட்சிப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த நகர்வு அதிமுக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




