முதலமைச்சர் விஜய்யைப் புகழ்ந்த அமமுக எம்எல்ஏ காமராஜ் நீக்கம்: டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!
சென்னை: சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யை ஆதரித்துப் பேசிய அமமுக எம்எல்ஏ காமராஜ், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ காமராஜ், கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறாக, முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய்க்கு ஆதரவாகக் கருத்துக்களைத் தெரிவித்தார். இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காமராஜ் தன்னிச்சையாகச் செயல்பட்டு தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முற்றிலும் முரணானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தச் செயல் மன்னார்குடி தொகுதி வாக்காளர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என விமர்சித்துள்ள அவர், கழகத்திற்குத் தொடர்ந்து களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், காமராஜை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அறிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள சூழலில், அமமுக-வின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.




