“மக்களுக்குக் கொடுக்க மனசு வேண்டும்” – முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில்!
சென்னை: தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசு நிர்வாகம் மற்றும் கடன் சுமை குறித்து அவருக்குச் சில ஆலோசனைகளையும் பதிலடிகளையும் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புதிதாக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு எனது வாழ்த்துகள். அவர் பதவியேற்றவுடன் கையெழுத்திட்டுள்ள மக்கள் நலத் திட்ட அறிவிப்புகளை வரவேற்கிறேன். அதே சமயம், எடுத்த எடுப்பிலேயே ‘அரசிடம் பணம் இல்லை’ என்று பேச ஆரம்பிக்க வேண்டாம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது பதிவில், “மக்களுக்குச் செய்ய வேண்டும் என்ற மனசும், அதைச் செயல்படுத்துவதற்கான ஆட்சித் திறமையும்தான் மிக முக்கியம். கோவிட் பெருந்தொற்று மற்றும் பெருவெள்ளம் போன்ற இக்கட்டான காலக்கட்டங்களில்கூட திமுக அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியது. தமிழகத்தின் கடன் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள்ளேயே உள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளார்.
நிர்வாகப் பணிகளைத் தொடங்கியுள்ள விஜய், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்கிற நுணுக்கங்களை விரைவில் கற்றுக்கொள்வார் என்றும் ஸ்டாலின் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.




