பெங்களூரு அரசு மருத்துவமனை சுவர் இடிந்து 7 பேர் பலி: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு!
பெங்களூருவில் பெய்த கனமழை காரணமாக பௌரிங் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்ததாகத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தச் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது எனக் குறிப்பிட்டுள்ளதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் ரொக்கமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது






