“இருநாட்டு வர்த்தக, பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த ஆலோசனை” – அதிபர் டிரம்ப உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சிப் பதிவு!
எவியன் (பிரான்ஸ்):
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான சந்திப்பு குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக ஊடகப் பக்கத்தில் விரிவான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகள் எனப் பலதரப்பட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து தாங்கள் ஆலோசித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது மற்றும் பரஸ்பர பொருளாதார வளர்ச்சியை இருதரப்பிலும் ஊக்குவிப்பது குறித்தே இந்தச் சந்திப்பில் முதன்மையாக விவாதிக்கப்பட்டதாகப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பாதுகாப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பப் பகிர்வு:
பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை, இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்பப் பகிர்வு, கூட்டு ராணுவப் பயிற்சிகள் மற்றும் வியூக ரீதியிலான ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது என இந்தச் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுமட்டுமன்றி, உலகளவில் வளர்ந்து வரும் அதிநவீன தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் விண்வெளித் துறைகளில் இருதரப்பு கூட்டுறவை வலுப்படுத்துவதன் அவசியத்தையும் இரு தலைவர்களும் பரஸ்பரம் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் தொடர்புகளுக்கு முக்கியத்துவம்:
இரு நாடுகளின் கல்வி, கலாச்சாரம் மற்றும் தொழில்முறை சார்ந்த மக்கள் தொடர்புகளை (People-to-People ties) மேலும் மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகப் பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதில் பிரதமர் மோடியும் உறுதியாக இருப்பதாக அதிபர் டிரம்ப் பாராட்டியிருந்த நிலையில், இந்தச் சந்திப்பு இரு நாடுகளின் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






