கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து வழிபாடு!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உலகப்புகழ் பெற்ற சாரங்கபாணி கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், நாள்தோறும் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று, அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட திருத்தேரில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயாருடன் சாரங்கபாணி சுவாமி எழுந்தருளினார்.
தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமை கொண்ட இக்கோயில் தேர், 110 அடி உயரமும், 30 அடி அகலமும், 500 டன் எடையும் கொண்டது. இந்த பிரம்மாண்டமான தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என விண்ணதிர முழக்கமிட்டு வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ராஜ வீதிகளிலும் அசைந்தாடி வந்த தேரினை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காகப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன், அடிப்படை வசதிகளும் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன.






