தமிழக அரசியலில் மாபெரும் திருப்பம்: தவெக ஆட்சியைப் பிடிக்கும் என ஆக்சிஸ் மை இண்டியா அதிரடி கணிப்பு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து இண்டியா டுடேவின் ஆக்சிஸ் மை இண்டியா (Axis My India) நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு, ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிரவைத்துள்ளது. இக்கணிப்பின்படி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல் தேர்தலிலேயே 98 முதல் 120 தொகுதிகளைக் கைப்பற்றி, தமிழகத்தில் ஆட்சியமைக்க மிகப்பெரிய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்கள் 118 என்ற நிலையில், தவெக இந்த இலக்கை நெருங்கும் அல்லது தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என இக்கணிப்பு கூறுகிறது.
அதேசமயம், ஆளுங்கட்சியான திமுக கூட்டணி 92 முதல் 110 தொகுதிகளைப் பெற்று கடும் போட்டியை அளிக்கும் என்றும், அதிமுக கூட்டணி 22 முதல் 33 தொகுதிகளை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படும் என்றும் இந்தக் கணிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற பெரும்பாலான நிறுவனங்கள் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் எனக் கணித்துள்ள நிலையில், ஆக்சிஸ் மை இண்டியா மட்டும் தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் சகாப்தம் பிறக்கப்போவதைக் கோடிட்டுக் காட்டியுள்ளது. இந்தத் தகவல் தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தைக் கரைபுரளச் செய்துள்ள நிலையில், வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது மட்டுமே உண்மையான நிலவரம் தெரியவரும்.






