கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம்: தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து பி.எல்.சந்தோஷ் தீவிர ஆலோசனை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் பணிகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக பாஜக மையக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. பீளமேடு பகுதியில் உள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முக்கியக் கூட்டத்திற்கு, பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன், அர்ஜூன மூர்த்தி, கே.டி.ராகவன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சட்டமன்றத் தேர்தலில் பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் நிலவும் வெற்றி வாய்ப்புகள், தேர்தல் களத்தில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தைத் தொடர்ந்து, தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷை, முன்னாள் மாநிலத் தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் கோவை தெற்குத் தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினர். வாக்கு எண்ணிக்கைக்குப் பிந்தைய அரசியல் நிலவரங்கள் குறித்து இந்தச் சந்திப்புகளில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் பாஜக வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.





