நீர் வரத்து அதிகரிப்பு – புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறப்பு
வடகிழக்கு பருவமழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததால், இன்று காலை மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரி, 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 21.20 அடி உயரம் கொண்டது. மழையால் நீர் வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி முதல் ஏரியிலிருந்து முன்னெச்சரிக்கையாக உபரி நீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் விநாடிக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், அது பின்னர் 250 கனஅடியாக மாற்றப்பட்டது.
பின்னர் மழை குறைந்ததால், நீர் வரத்து குறைந்து, நேற்று காலை உபரி நீர் திறப்பை தற்காலிகமாக நிறுத்தியிருந்தனர். எனினும், கடந்த சில நாட்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால், புழல் ஏரிக்கு அதிக அளவில் நீர் வந்துள்ளது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி, ஏரியில் 2,707 மில்லியன் கனஅடி நீர் இருப்பு பதிவாகியுள்ளது. நீர் மட்டம் 18.49 அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 556 கனஅடியாகவும் இருந்ததால், காலை 8 மணியளவில் மீண்டும் விநாடிக்கு 250 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது.
நீர் வரத்து மாறுபாட்டை கருத்தில் கொண்டு, உபரி நீரின் அளவை தேவைக்கேற்ப அதிகரிக்கவோ குறைக்கவோ நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், புழல் ஏரியிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீர் கால்வாயின் இருபுற தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.