விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான வனஜா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, வீரியம் மிகுந்த வெடிமருந்துகளைக் கையாளும் வேளையில் இந்த விபத்து நேரிட்டது. இதில் ஆலையின் 4 அறைகள் தரைமட்டமானதோடு, சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதன் அதிர்வு உணரப்பட்டது.
தகவலறிந்து சிவகாசி, சாத்தூர் மற்றும் விருதுநகரிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர், மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளரைத் தேட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.




