“மக்களின் துயர் துடைத்தவர்களே மகான்கள்” – கர்நாடகாவில் பிரதமர் மோடி புகழாரம்!
கர்நாடக மாநிலத்திற்கு ஒருநாள் பயணமாக வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, மகான்கள் என்பவர்கள் ஆன்மீக வழிகாட்டுதலோடு நின்றுவிடாமல் சமூகத்தின் மேம்பாட்டிற்காக வாழ்ந்தவர்கள் எனப் புகழாரம் சூட்டினார். பெங்களூரு விமான நிலையம் வந்தடைந்த பிரதமரை, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேரில் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, மாண்டியாவில் உள்ள ஆதிச்சுஞ்சனகிரி மடத்திற்குச் சென்ற பிரதமர், அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘ஸ்ரீ குரு பைரவைக்ய மந்திரத்தை’ திறந்து வைத்துச் சிறப்பு சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், நமது சமுதாயத்தில் அவ்வப்போது தோன்றும் சிறந்த ஆளுமைகள் ஆன்மீகப் பணிகளுடன் மக்களோடும் இணைந்து செயல்பட்டவர்கள் எனக் குறிப்பிட்டார். மக்களின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்டு, அவர்களின் போராட்டங்களை உணர்ந்து, கஷ்டங்களிலிருந்து சமுதாயத்தை வெளியே கொண்டு வருவதற்கான நல்வழியைக் காட்டியவர்கள் மகான்கள் என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். மகான்களின் இத்தகைய சமூகப் பங்களிப்பு என்றும் போற்றத்தக்கது எனவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.





