மீஞ்சூர் அருகே அதிர்ச்சி: மொட்டை மாடியில் படித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவியிடம் கத்தி முனையில் அத்துமீறல்!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் பகுதியில், வீட்டின் மொட்டை மாடியில் படித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவியிடம் போதை இளைஞர்கள் கத்தி முனையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிகாம் பயின்று வரும் அந்த மாணவி, வீட்டில் படித்துக்கொண்டிருந்தபோது கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த மூன்று இளைஞர்கள் இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், தப்பியோட முயன்ற டில்லி பாபு என்ற இளைஞரை மடக்கிப் பிடித்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் அந்த இளைஞருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





