‘ஜனநாயகன்’ படக் காட்சிகளைப் பகிர்ந்தால் சிறை: தயாரிப்பு நிறுவனம் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை!
சென்னை:
சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகளைச் சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்தாலோ அல்லது சமூக வலைதளங்களில் பகிர்ந்தாலோ கடும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனப் படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளது.
சட்டவிரோதப் பரப்பல்
இது குறித்துத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகன் திரைப்படத்தின் சில முக்கியமான காட்சிகள் மற்றும் பெரும்பான்மையான பகுதிகள் அடையாளம் தெரியாத நபர்களால் சட்டவிரோதமாகத் திருடப்பட்டு இணையத்தில் பரப்பப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது திரையுலகிற்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பில் சமூக வலைதளங்கள்
வாட்ஸ்அப் (WhatsApp), டெலிகிராம் (Telegram), இன்ஸ்டாகிராம் (Instagram), பேஸ்புக் (Facebook) போன்ற எந்தவொரு தளத்திலும் இந்தப் படத்தின் காட்சிகளைப் பதிவிறக்கம் செய்வதோ, சேமிப்பதோ அல்லது பிறருக்குப் பகிர்வதோ சட்டப்படி குற்றமாகும். இணையத்தில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் சைபர் வல்லுநர்களால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இதற்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டறியும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் நிறுவனம் எச்சரித்துள்ளது.
கிரிமினல் நடவடிக்கை
திருட்டுத்தனமாகத் திரைப்படத்தைப் பரப்புபவர்கள் மீது எவ்வித விதிவிலக்கும் இன்றி சிவில் மற்றும் கிரிமினல் (Civil and Criminal actions) நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், பொதுமக்கள் யாராவது அத்தகைய வீடியோக்கள் அல்லது இணைய லிங்குகளைப் பெற்றால், அவற்றை உடனடியாக அழித்துவிடுமாறு (Delete) தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
திரைப்படத் துறையின் உழைப்பை மதிக்கும் வகையிலும், திருட்டு விடியோக்களைத் தவிர்க்கும் வகையிலும் ரசிகர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.






