சிறுவர்களை வைத்து தெருமுனை கூட்டம்: நிலக்கோட்டை நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் சர்ச்சை!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சியினர் சிறுவர்களை அழைத்துத் தெருமுனை கூட்டம் நடத்தியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிலக்கோட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் கயிலை ராஜன், தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் தீவிரப் பிரசாரம் மற்றும் கொள்கை விளக்கக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக அழகம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில், அரசியல் புரிதல் இல்லாத சுமார் 50-க்கும் மேற்பட்ட சிறுவர் மற்றும் சிறுமியர்கள் சீருடை போன்ற உடைகளை அணிந்து கலந்துகொண்டனர். தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் குழந்தைகளையும், சிறுவர்களையும் ஈடுபடுத்தக் கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், அரசியல் கூட்டத்தில் இத்தனை சிறுவர்கள் பங்கேற்றது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தேர்தல் விதிமுறை மீறலாகக் கருதப்படுவதால், இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.







