நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி: இயக்குநர்களின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள இயக்குநர்களின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிக வட்டி தருவதாகக் கூறி பல்லாயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட இந்த வழக்கில், ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இயக்குநர்களைக் கைது செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, அந்நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்து விற்பனை செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலங்களை வாங்குவதற்கு ஆன்லைன் பதிவு கட்டணமாக 1,000 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுவதாக வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “இந்தத் திட்டம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டினார். மேலும், மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, அவர்கள் அனைவருக்கும் இந்தத் தகவல் சென்றடையும் வகையில் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை வரும் மார்ச் 17-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.