ரேஷன் கடைகளில் பிரதமர் படம்: கோவையில் பா.ஜ.க-வினர் உண்ணாவிரதம் – போலீசார் அதிரடி கைது!
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தி, கோவையில் பா.ஜ.க-வினர் நடத்திய போராட்டம் பரபரப்பில் முடிந்தது. கோவை சிவானந்தா காலனி பகுதியில் பா.ஜ.க-வின் மத்திய அரசு நலத்திட்டப் பிரிவினர் இதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
மத்திய அரசின் மானிய விலையிலான உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதால், பிரதமரின் படம் ரேஷன் கடைகளில் இடம்பெற வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக இருந்தது. ஆனால், இந்தப் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி, காவல்துறையினர் போராட்டக் காரர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த போராட்டப் பந்தலையும் போலீசார் அப்புறப்படுத்தினர்.
காவல்துறையின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து பா.ஜ.க நிர்வாகிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறுதியில் மறியலில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்தப் போராட்டத்தினால் சிவானந்தா காலனி பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.