பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம்: விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!
நாக்பூர்:
இந்திய விமானப்படை அதிகாரியின் மனைவியை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, ஆபாச வீடியோக்களைக் காட்டி மிரட்டி கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அரங்கேறியுள்ளது. மும்பை டிசிஎஸ் (TCS) நிறுவன கிளை அலுவலக சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், நாக்பூரில் அரங்கேறியுள்ள இந்த மாற்று மதமாற்றக் கொடூரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட 24 வயதான இளம்பெண் அளித்த புகாரின் பேரில், சோனேகான் காவல்துறையினர் பாலியல் பலாத்காரம், மிரட்டிப் பணம் பறித்தல், மதமாற்ற முயற்சி மற்றும் மகாராஷ்டிராவின் ‘பில்லி சூனியம் தடுப்பு மற்றும் ஒழிப்புச் சட்டம்’ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இக்கொடூர செயலில் ஈடுபட்ட அயாஸ் தாஜ் மதாரே (26) மற்றும் அமீன் ஷேக் (30) ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள இஸ்லாமிய மதகுரு ஹஸ்ரத் மௌலானாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பள்ளி நண்பனின் துரோகமும் தொடர் மிரட்டல்களும்:
ரியல் எஸ்டேட் துறையில் சொத்து விற்பனை (Property Dealing) தொழிலில் ஈடுபட்டு வரும் பாதிக்கப்பட்ட பெண்ணை, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிலம் வாங்குவது தொடர்பாக அவரது பள்ளிக்கால நண்பரான அயாஸ் தாஜ் மதாரே தொடர்பு கொண்டுள்ளார். திட்டமிட்டபடி வார்தா சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்து, மயக்க மருந்து கலந்த பழச்சாற்றைக் கொடுத்து அந்த இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதனை ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களாகவும் பதிவு செய்து கொண்டு, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி தொடர்ந்து பாலியல் ரீதியாகச் சுரண்டியதுடன், அவரிடமிருந்து சுமார் 3.09 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளனர். திருமணமானவர் என்பதால் அச்சத்தின் காரணமாக ஓராண்டாக அமைதி காத்த அந்தப் பெண், இறுதியாகத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனது கணவரிடம் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
வலுக்கட்டாய மதமாற்றச் சடங்கும் வைரலாகும் வீடியோ ஆதாரமும்:
இதற்கிடையில் கடந்த மே 31 அன்று, அயாஸ் அந்தப் பெண்ணை நாக்பூரின் கல்மேஷ்வர் பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு அமீன் ஷேக் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹஸ்ரத் மௌலானா என்ற மதகுருவை அறிமுகப்படுத்தியுள்ளார். அங்கு ஒரு தனிமையான இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு, இளம்பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக இஸ்லாமிய முறைப்படி கட்டாயத் திருமணமும், மதமாற்றச் சடங்குகளும் நடத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ள வீடியோ ஆதாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. “என்னை விடுங்கள்” என்று அந்த இளம்பெண் பதற்றத்துடன் அலறுவதும், பள்ளி நண்பனான அயாஸ் மத வசனங்களை ஓதியபடி அந்தப் பெண்ணின் கைகளை வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கொண்டு அச்சுறுத்துவதும் அந்த வீடியோவில் பதிவாகி நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.





