செய்யாறு: நிதி நிறுவன உரிமையாளரைக் கடத்தி நகைகளைப் பறித்த உறவினர் உட்பட 4 பேர் கைது!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரைக் காரில் கடத்தி, கத்தி முனையில் 22 சவரன் நகைகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த 4 பேரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இருங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ பைனான்ஸ் உரிமையாளர் முனிகிருஷ்ணன், கடந்த 3-ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். கடத்தல்காரர்கள் அவரிடமிருந்த 16 சவரன் நகைகளைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், அவரது தாயையும் தொலைபேசியில் மிரட்டி மேலும் 6 சவரன் நகைகளைப் பறித்துக்கொண்டு முனிகிருஷ்ணனை விடுவித்துத் தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து முனிகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் அசோக்குமார் என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில், முனிகிருஷ்ணனின் உறவினரான சுந்தர்ராஜன் என்பவர் இரண்டு சிறுவர்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தைத் தீட்டியது அம்பலமானது. இதனையடுத்து 4 பேரைக் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 19 சவரன் நகை, ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.