அருணாச்சல் காட்டுத்தீ: விமானப்படையின் Mi-17 V5 ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்!
அருணாச்சல் பிரதேசத்தின் மெபோ மற்றும் சிகார் பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயை அணைக்கும் பணியில் இந்திய விமானப்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. காடுகளில் பற்றிய தீயைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவியதால், விமானப்படையின் உதவியை மாநில நிர்வாகம் நாடியது. இதனைத் தொடர்ந்து, களமிறக்கப்பட்ட விமானப்படையின் Mi-17 V5 ரக ஹெலிகாப்டர்கள், அப்பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து தண்ணீரைச் சேகரித்து, தீப்பற்றிய பகுதிகளில் வான்வழியாக ஊற்றி வருகின்றன.
விமானப்படை வீரர்களின் இந்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக, தீ அடுத்தடுத்த பகுதிகளுக்குப் பரவாமல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், காற்றின் வேகம் காரணமாகத் தீ மீண்டும் பரவாமல் இருக்கத் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் அணைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.