மடப்புரம் அஜித்குமார் மீதான நகை திருட்டு புகார் முடித்து வைப்பு: நீதிமன்றத்தில் புகார்தாரர் உருக்கம்!
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் மீது சுமத்தப்பட்டிருந்த நகை திருட்டு புகாரை மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி நிகிதா என்பவர் அளித்த இந்தப் புகாரின் அடிப்படையில், தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், காவல் துறையினரின் தாக்குதலால் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு 6 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த நகை திருட்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரர் நிகிதா நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வ மனுவைத் தாக்கல் செய்தார். திருடு போனதாகக் கூறப்படும் நகைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் வழக்கை முடித்துக்கொள்வதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நிகிதாவின் சம்மதத்துடன் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிகிதா, தான் புகார் அளித்த அஜித்குமார் தற்போது உயிருடன் இல்லை என்றும், ஒருவேளை நகைகள் கிடைத்தாலும் அதனை அணியக்கூடிய மனநிலையில் தான் இல்லை என்றும் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.