திறந்து வைக்கப்பட்ட ஒரு மாதத்திலேயே அதிர்ச்சி: கொருக்குப்பேட்டை மேம்பால சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது!
சென்னை கொருக்குப்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்ட புதிய மேம்பாலத்தின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொருக்குப்பேட்டை எழில் நகர் ரயில்வே டிராக் பகுதியில் சுமார் 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த மாதம் இந்த மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது.
தற்போது மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் இருந்து கான்கிரீட் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு நேரில் வந்த அதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார். தரமற்ற கட்டுமானமே இதற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டிய அவர், மாநகராட்சி அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் குறுகிய காலத்திலேயே சிதைவடைவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.