துபாயில் சிக்கித் தவித்த 12 தமிழர்கள் மீட்பு: பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்குப் பாராட்டு!
கோவை: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாகத் துபாயில் சிக்கித் தவித்த 12 தமிழர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுத் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இந்த மீட்புப் பணியில் துரிதமாகச் செயல்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
வளைகுடா நாடுகளில் நிலவும் அசாதாரண சூழலால் சில விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால் தமிழகத்திலிருந்து துபாய்க்குச் சுற்றுலா சென்றிருந்த 12 பேர் அங்குள்ள விமான நிலையத்திலேயே தங்கும் சூழல் ஏற்பட்டது. இது குறித்துத் தகவலறிந்த பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக வானதி சீனிவாசனைத் தொடர்பு கொண்டு உதவி கோரினர்.
உடனடியாகச் செயல்பட்ட அவர், பாஜகவின் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) பிரிவு உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களை மீட்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தினார். அவரது முயற்சியால் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுத் தமிழகம் அழைத்து வரப்பட்டனர். இன்று கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த வானதி சீனிவாசனை, மீட்கப்பட்டவர்கள் நேரில் சந்தித்துத் தங்களது நெகிழ்ச்சியான நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.