சிதம்பரத்தில் பயங்கரம்: கஞ்சா போதையில் பாதசாரிகளைத் தாக்கிய சிறுவர்கள் – சிசிடிவி காட்சியால் பரபரப்பு
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் கும்பல், சாலையில் நடந்து சென்றவர்களைத் தாக்கிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு கொள்ளுமேடு தெருவில், இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 6 பேர் கொண்ட கும்பல் இந்த அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.
முற்றிலும் போதையில் இருந்த அந்த கும்பல், சாலையில் அமைதியாக நடந்து சென்ற இஸ்லாமிய இளைஞர்களை வழிமறித்துத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவங்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளன. இது குறித்துப் பாதிக்கப்பட்ட இளைஞர் மற்றும் அப்பகுதி ஜமாத்தினர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார், ஓமக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் மற்றும் 5 சிறுவர்களைக் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 5 சிறுவர்கள் கடலூரில் உள்ள அரசு சீர்திருத்தப் பள்ளியிலும், ஒரு இளைஞர் கடலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். போதைப்பொருள் புழக்கத்தால் சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.