சென்னையில் போலி பாஸ்போர்ட் மூலம் வங்கதேசம் தப்ப முயன்ற நபர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
சென்னை: சென்னையில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பாஸ்போர்ட் பெற்று, அதன்மூலம் வங்கதேசம் செல்ல முயன்ற நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த முகமது ஹருண் மை என்பவர், கடந்த 1999-ஆம் ஆண்டு வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தங்கியிருந்த அவர், தனது அடையாளத்தை மறைத்து பெயரை மாற்றி, போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து இந்திய பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இந்நிலையில், அந்த போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி வங்கதேசத்திற்குத் தப்பிச் செல்ல முயன்றபோது, ரகசியத் தகவலின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். இது தொடர்பாக அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.