ஆண்டிபட்டி மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு: முகூர்த்த நாட்களால் வியாபாரிகள் மகிழ்ச்சி
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சந்தைக்குப் பூக்களின் வரத்து குறைந்துள்ள சூழலில், தொடர் முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷங்கள் காரணமாகப் பூக்களுக்கான தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
விலை நிலவரப்படி, கடந்த நாட்களில் கிலோ 700 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப் பூ, தற்போது 1,100 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், 500 ரூபாய்க்கு ஏலம் போன முல்லை மற்றும் பிச்சிப் பூக்கள் தற்போது 900 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட பன்னீர் ரோஜா 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதுபோன்று சந்தையில் உள்ள பெரும்பாலான பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்து ஏலம் போனதால், வர்த்தகம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.