சென்னை உயர்நீதிமன்றத்தின் 55-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி பதவியேற்பு!
சென்னை உயர்நீதிமன்றத்தின் 55-வது தலைமை நீதிபதியாக, நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம். ஸ்ரீவஸ்தவா பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த தர்மாதிகாரியை புதிய தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் (ராஜ் பவன்) நடைபெற்ற விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வந்தே மாதரம், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்துடன் தொடங்கிய இந்த நிகழ்வில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த நீதிபதி தர்மாதிகாரி, நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று 1992-ஆம் ஆண்டு முதல் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கினார். பின்னர் 2018-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றிய அவர், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.