ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு: நிபுணர்கள் அவை மீது இஸ்ரேல் ஏவுகணை வீச்சு!
தெஹ்ரான்: ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் கமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei), அந்நாட்டின் புதிய உச்சத் தலைவராக அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அணு ஆயுதத் தயாரிப்பு விவகாரத்தால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த போரில் கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் அடுத்த தலைமை யார் என்ற கேள்வி எழுந்திருந்தது.
ரகசியத் தேர்வு:
புனித நகரமான கியோமில் (Qom) உள்ள நிபுணர்கள் அவை (Assembly of Experts) கட்டிடத்தில் 88 மூத்த மதக் குருமார்கள் ஒன்றுகூடி இந்த முக்கியமான முடிவை எடுத்தனர். ஈரானின் ஆன்மீகம் மற்றும் ராணுவக் கட்டமைப்பில் உச்சத் தலைவர் பதவி மிக உயர்ந்தது என்பதால், மொஜ்தபாவின் நியமனம் சர்வதேச அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலின் தாக்குதல்:
புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவதை முன்கூட்டியே அறிந்த இஸ்ரேல் ராணுவம், அந்தத் தேர்வினைத் தடுக்கும் நோக்கில் நிபுணர்கள் அவை கட்டிடம் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் கட்டிடத்திற்குள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அதிகாரி, “ஈரானுக்குப் புதிய தலைமை உருவாவதைத் தடுப்பதே எங்களது நோக்கம்” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். தந்தை கொல்லப்பட்ட நிலையில், மகன் மொஜ்தபா தலைமையேற்றுள்ளதால் மத்திய கிழக்கில் போர் இன்னும் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது.