பெரம்பலூர்: 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் சாலை மறியல் – 200-க்கும் மேற்பட்டோர் கைது!
பெரம்பலூர்: தமிழக அரசைக் கண்டித்து 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்டம் பாலக்கரை பகுதியில் வருவாய்த்துறை ஊழியர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டு, தங்களது நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
காவல்துறையின் அனுமதியின்றிச் சாலை மறியலில் ஈடுபட்டதால், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களைப் போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இந்தத் தொடர் போராட்டத்தின் காரணமாக, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகங்கள் ஊழியர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் அரசுப் பணிகள் முற்றிலும் முடங்கி, சான்றிதழ்கள் மற்றும் இதர உதவிகளுக்காக வந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.