அஜித்குமார் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் புகார் தாரர் நிகிதா ஆஜர் – பரபரப்பு வாக்குமூலம்!
மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாகப் புகார் அளித்த நிகிதா, மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். கடந்த ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி, தனிப்படை காவலர்களால் அஜித்குமார் அழைத்துச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கை சிபிஐ (CBI) விசாரித்து வருகிறது. இந்தச் சூழலில், நகை திருட்டுப் புகார் அளித்த நிகிதாவை நேரில் விசாரிப்பதே முறையானது என சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவின்படி ஆஜரான நிகிதாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, நிகிதாவின் வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிகிதா, “இந்த விவகாரத்தில் புகார் அளிக்குமாறு எனக்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை; தனிப்படை காவலர்கள் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது குறித்து எனக்கு எதுவும் தெரியாது” எனத் தனது விளக்கத்தை அளித்தார். காவல்துறைத் தரப்பு அஜித்குமாரைத் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், புகார் தாரரின் இந்த வாக்குமூலம் வழக்கில் முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.