நாமக்கல்: மனு அளிக்க வந்த விவசாயியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட திமுக எம்.பி – வைரலாகும் வீடியோ!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மனு அளிக்க வந்த விவசாயி ஒருவரிடம் ஈரோடு தொகுதி திமுக எம்.பி பிரகாஷ் அநாகரிகமாக நடந்துகொண்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிபாளையத்தில் அரசு சார்பில் பொதுமக்களுக்குப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திமுக எம்.பி பிரகாஷ், நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது விவசாயி ஒருவர் தனது பகுதியில் தடுப்பணை கட்டித் தரக் கோரி மனு ஒன்றை அளிக்க முயன்றார். அப்போது அந்த மனுவைப் பெற்றுக்கொள்ள மறுத்த எம்.பி, சம்பந்தப்பட்ட விவசாயியிடம் பொறுமையாகப் பேசாமல் அதட்டும் தோனியில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், “உள்ளூர் எம்.எல்.ஏ தங்கமணியிடம் (அதிமுக) போய் கேளுங்கள்” என ஒருமையில் பேசியதாகவும் தெரிகிறது.
மக்களின் குறைகளைக் கேட்க வேண்டிய மக்கள் பிரதிநிதியே, மனு அளிக்க வந்த விவசாயியிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. விவசாயியின் கோரிக்கையைப் அலட்சியப்படுத்திய எம்.பி-யின் இந்தச் செயலுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.