விமானத்தில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் அதிரடி கைது!
சென்னை:
சென்னையிலிருந்து டெல்லி சென்ற விமானத்தில் பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரின் அடிப்படையில், திருவள்ளூர் நகராட்சி திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், கவுன்சிலர் பிரபாகரன் தனது நண்பருடன் விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது இருவரும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நிலையில், பணியில் இருந்த விமானப் பணிப்பெண்ணிடம் சைகை காட்டி அநாகரிகமான முறையில் அத்துமீறியதாகப் புகார் எழுந்தது. இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்தப் பெண், உடனடியாக அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய இரண்டு கடுமையான பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சம்பவம் நடந்த பிறகு இருவரும் தலைமறைவாகி போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில், அவர்கள் டெல்லியிலிருந்து மீண்டும் சென்னைக்கு விமானத்தில் வந்திறங்கியபோது, சென்னை விமான நிலையத்திலேயே வைத்துப் போலீசார் இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.