வானில் அரங்கேறும் அதிசயம்: இன்று ஒரே நேர்க்கோட்டில் 6 கோள்கள் – கொடைக்கானலில் சிறப்பு ஏற்பாடு!
கொடைக்கானல்: சூரிய குடும்பத்தைச் சேர்ந்த ஆறு கோள்கள் இன்று மாலை வானில் ஒரே நேர்க்கோட்டில் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு நடைபெற உள்ளது. இதனைப் பொதுமக்கள் கண்டு ரசிக்கக் கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வானில் இன்று மாலை வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்களும் வரிசையாக ஒரே நேர்க்கோட்டில் அணிவகுக்கின்றன. இந்த அரிய நிகழ்வைப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் துல்லியமாகக் காணும் வகையில், கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தில் (Kodaikanal Solar Observatory) நவீனத் தொலைநோக்கிக் கருவிகள் (Telescopes) அமைக்கப்பட்டுள்ளன.
வானியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த ஆறு கோள்களில் பெரும்பாலானவற்றை வெறும் கண்களாலேயே பார்க்க முடியும். இருப்பினும், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்கள் பூமியிலிருந்து மிக அதிகத் தொலைவில் இருப்பதால், அவற்றை வெறும் கண்களால் காண்பது கடினம் என்றும், தொலைநோக்கி வழியாக மட்டுமே அவற்றைத் தெளிவாகக் காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அபூர்வ நிகழ்வைக் காண வானியல் ஆர்வலர்கள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர். மேகமூட்டம் இன்றி வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில், இந்த “கோள்களின் அணிவகுப்பை” மிக அழகாகத் தரிசிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்