ஜப்பானில் அதிரடி மாற்றம்: ஆன்மிகப் பணிகளில் இறங்கும் ‘AI ரோபோ’ துறவிகள்!
கியோட்டோ (ஜப்பான்): ஜப்பானில் நிலவி வரும் மனிதத் துறவிகள் பற்றாக்குறையை ஈடுசெய்யும் விதமாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன ‘ரோபோ’ துறவிகளைப் புழக்கத்திற்கு கொண்டு வந்து அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் புதிய ஆன்மிகப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
ஜப்பானின் புகழ்பெற்ற கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்தத் தனித்துவமான ரோபோவை வடிவமைத்துள்ளனர். புத்த மதத்தின் மிகவும் கடினமான மற்றும் ஆழமான புனித நூல்களைக் கூட முழுமையாகக் கற்றுத் தேர்ந்துள்ள இந்த ரோபோ, ஒரு தேர்ந்த துறவியைப் போலவே செயல்படும் திறன் கொண்டது. குறிப்பாக, மனிதர்கள் தங்களது தனிப்பட்ட மற்றும் உணர்ச்சிகரமான பிரச்சனைகளை மற்ற மனிதர்களிடம் வெளிப்படையாகக் கூறத் தயங்கும் சூழலில், இந்த ரோபோவிடம் ஆலோசனைகளைக் கேட்கலாம். அதற்குத் தெளிவான மற்றும் ஆறுதலான பதில்களை இது வழங்குகிறது.
தத்ரூபமான மனிதத் தோற்றத்தில், இரண்டு கால்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, கோயில்களில் அமர்ந்து மந்திரங்களை ஓதுவதுடன், பல்வேறு மதச்சடங்குகளையும் தன்னிச்சையாக மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் துறவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், வருங்காலத்தில் மனிதத் துறவிகளுக்குப் பதிலாக இந்த ரோபோக்களே ஆன்மிகப் பணிகளை முன்னின்று நடத்தும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்பத்தையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் ஜப்பானின் இந்த விசித்திரமான முயற்சி, தற்போது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.