பென்டகனின் நிபந்தனையை நிராகரித்த ஆந்த்ரோபிக்: ராணுவப் பயன்பாட்டிற்கு ‘கிளாட் ஏஐ’ வழங்க மறுப்பு!
வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவுத் துறையில் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனம், அமெரிக்க ராணுவத்தின் நிபந்தனையற்ற பயன்பாட்டிற்குத் தனது ‘கிளாட் ஏஐ’ (Claude AI) தொழில்நுட்பத்தை வழங்க முடியாது என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளது. முன்னதாக, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், பிப்ரவரி 27-ஆம் தேதிக்குள் எந்தவித நிபந்தனையுமின்றி ராணுவப் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், தவறினால் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நெருக்கடிக்கு மத்தியிலும், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சி.இ.ஓ (CEO) டாரியோ அமோடி, மனசாட்சிக்கு விரோதமான ராணுவத்தின் இக்கோரிக்கைகளை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஏஐ தொழில்நுட்பம் போர் மற்றும் ஆயுதப் பயன்பாட்டிற்குத் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற தார்மீக அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்க அரசின் இந்த மெகா ஒப்பந்தத்தை ஆந்த்ரோபிக் நிறுவனம் நிராகரித்துள்ளது தொழில்நுட்ப உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.