தவெக-வில் விருப்ப மனு சர்ச்சை: மாவட்டச் செயலர்கள் மிரட்டுவதாகப் புகார்!
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோருக்கு கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டன. முதல் நாளிலேயே பல்லாயிரக்கணக்கான மனுக்கள் விற்றுத் தீர்ந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்த மனுக்களைத் திரும்ப ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
விருப்ப மனுக்களைப் பெற்றுச் சென்ற பல நிர்வாகிகள், அவற்றை நிரப்பித் திரும்ப ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் பின்னணியில் மாவட்டச் செயலர்களின் அழுத்தம் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்), மாநில நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்டோருடன் ஆலோசித்து ஏற்கனவே சுமார் 80 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்டதாகவும், இதனால் மற்றவர்கள் மனு அளிக்க வேண்டாம் என மாவட்டச் செயலர்கள் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.
“மீறி விருப்ப மனுக்களை வழங்கினால் கட்சியிலிருந்து நீக்கப்படுவீர்கள்” எனச் சில மாவட்டங்களில் நிர்வாகிகள் எச்சரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. வேட்பாளர் தேர்வில் வெளிப்படைத்தன்மை வேண்டும் எனத் தொண்டர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், இந்த உட்கட்சி மோதல் மற்றும் மிரட்டல் புகார்கள் தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், “வேட்பாளர்களைத் தலைவர் விஜய் அவர்களே இறுதி செய்து அறிவிப்பார்” என கட்சியின் தலைமை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.