நாமக்கல், நீலகிரி மற்றும் கோவில்பட்டியில் பரவலாகப் பெய்த திடீர் மழை: வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நாமக்கல், நீலகிரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் திடீரென பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. நாமக்கல் அடுத்த புதன் சந்தை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே கடும் வெயில் கொளுத்தி வந்த நிலையில், திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த மழையினால் வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோல், நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இந்தத் திடீர் மழையினால் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் சற்று சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை நேரத்தில் பலத்த மழை வெளுத்து வாங்கியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் நீடித்த இந்த மழையினால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வழக்கத்திற்கு மாறாகக் கொளுத்திய வெயிலைத் தொடர்ந்து பெய்த இந்தத் திடீர் மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால், பொதுமக்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர்.