இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு: நயினார் நாகேந்திரன் இரங்கல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், எளிமையின் அடையாளமுமான ஐயா நல்லகண்ணு அவர்கள், தனது 101-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இவரது மறைவுக்குத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டின் சுதந்திரத்திற்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் இளம் வயது முதலே நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்த ஒரு மாபெரும் தலைவரை இழந்துவிட்டதாகக் கனத்த இதயத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வாழும் காலம் முழுவதும் எளிமையின் சிகரமாகத் திகழ்ந்த நல்லகண்ணு அவர்களின் பொதுச்சேவையும், அர்ப்பணிப்பும் தமிழக அரசியல் வரலாற்றிலும் மக்கள் மனதிலும் என்றும் நீங்கா இடம்பெற்றிருக்கும் எனப் புகழாரம் சூட்டிய நயினார் நாகேந்திரன், அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் சுற்றத்தாருக்கும் தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.