திமுக அரசு ஊழல் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பாதுகாக்கிறது: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் தாக்கு!
திருச்சி: திமுக ஆட்சியில் குயவர் சமுதாய மக்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அரசு பாதுகாத்து வருவதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். திருச்சி தென்னூர் உழவர் சந்தை பகுதியில் நடைபெற்ற ‘அகில இந்திய குயவர் உரிமை கட்சியின்’ முதல் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
அதிமுக ஆட்சியின் போது குயவர் சமுதாய மக்களின் நலனுக்காகக் கொண்டு வரப்பட்ட பல்வேறு பயனுள்ள திட்டங்களை, திமுக அரசு பதவியேற்றவுடன் அரசியல் காரணங்களுக்காக முடக்கியுள்ளதாக அவர் சாடினார். இது அந்தச் சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.
மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சில அரசு அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டுள்ளது குறித்து அமலாக்கத்துறை (ED) முறையான ஆதாரங்களை வழங்கியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திமுக அரசு தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். ஊழல் செய்தவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.