சென்னையில் மழை பாதிப்பு: 215 நிவாரண முகாம்கள் தயார்
வங்கக் கடலில் உருவாகிய புயலை எதிர்கொள்வதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் 215 நிவாரண முகாம்கள் முழுமையாக தயாராக உள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போதைய வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அக்.27-ம் தேதி புயலாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக 26-ம் தேதி கனமழை, 27-ம் தேதி மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின், பருவமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீரால் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க 215 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. உணவு வழங்க 106 சமையல் கூடங்கள் தயாராக உள்ளன.
ஏற்கெனவே பெய்த மழையால் பாதிக்கப்பட்ட 4,40,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற 1,436 மோட்டார் பம்புகள் மற்றும் 150 மோட்டார் பம்புகள் (100 எச்பி திறன்) தயார் நிலையில் உள்ளன. மரங்களை அகற்ற 457 இயந்திரங்கள் தயாராக உள்ளன; அக்.17 முதல் 22-ம் தேதி வரை 31 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
மாநகராட்சி தொடர்பான புகார்கள் 1913 என்ற எண்ணில், சென்னை குடிநீர் வாரிய புகார்கள் 1916 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். மாநகராட்சி சார்பில் 22,000 பேரும், குடிநீர் வாரியத்தில் 2,149 களப்பணியாளர்களும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.