சர்வதேச மகளிர் தினம்: ஆரோவில்லில் கங்கை அமரனின் இன்னிசை சங்கமம்!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில்லில் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் பங்கேற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரோவில்லில் உள்ள பாரத் நிவாஸ் அரங்கில், “அன்னை ஸ்ரீ அரவிந்தருடன் ஒரு இசை சங்கமம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கங்கை அமரன் கலந்துகொண்டு காலத்தால் அழியாத பக்திப் பாடல்கள் மற்றும் புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களைப் பாடி அங்கிருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
பாடல் பாடுவதோடு மட்டுமல்லாமல், திரைப்படங்களில் அந்தந்தச் சூழல்களுக்கு ஏற்ப பாடல்கள் உருவான விதம் குறித்தும், தனது சகோதரர் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றிய சுவாரஸ்யமான அனுபவங்கள் குறித்தும் அவர் மேடையில் பகிர்ந்துகொண்டார். இசைத் துறையில் தனது நீண்டகாலப் பயணத்தை நினைவுகூர்ந்த அவரது பேச்சு, அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி, பக்தியும் கலையும் கலந்த ஒரு இனிய மாலைப் பொழுதாக அமைந்தது.





