வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளும் தோல்வியடைந்துள்ள வரலாறு – அயத்துல்லா கமேனி
உலகில் மிக வலிமையான ராணுவத்தை கொண்ட நாடுகள்கூட மீண்டும் எழ முடியாத வகையில் தாக்கப்பட்ட வரலாறு உள்ளதாக ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா கமேனி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை எச்சரித்து வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 47 ஆண்டுகளாக ஈரானை தாக்க முடியவில்லை என முன்னாள் அதிபர் ட்ரம்ப் கூறியதாகவும், இது ஈரானின் வலிமையை வெளிப்படுத்தும் சிறந்த ஒப்புதல் வாக்குமூலம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகிலேயே மிக சக்திவாய்ந்த ராணுவம் தங்களிடம் இருப்பதாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருவதை சுட்டிக்காட்டிய கமேனி, அந்த அளவுக்கு வலிமையான படைகள்கூட சில நேரங்களில் கடுமையாக தாக்கப்படலாம் என எச்சரித்துள்ளார்.
மேலும், ஈரானை நோக்கி அமெரிக்கா போர்க்கப்பலை அனுப்பியதைக் குறித்து கருத்து தெரிவித்த அவர், அந்த போர்க்கப்பலை கடலுக்குள் மூழ்கடிக்கும் திறன் கொண்ட சக்திவாய்ந்த ஆயுதங்கள் ஈரானிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.