ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளை – போலீசார் விசாரணை
ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் இருந்து 60 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள லட்சுமி நாராயணன் நகரைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ராஜன். இவர் மதிய நேரத்தில் வெளியே சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது.
ஆடிட்டர் ராஜன் வெளியே சென்றதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், மறைவான இடத்தில் வைக்கப்பட்டிருந்த வீட்டுச் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கொள்ளையர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.