சட்டமன்ற பேரவையில் இடைக்கால பட்ஜெட்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்
தமிழக சட்டமன்ற பேரவையில் நடப்பாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
பட்ஜெட் உரையின் போது பேசிய அமைச்சர், உயர்ந்த பொருளாதாரம் கொண்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் திகழ்வதாக தெரிவித்தார். மேலும், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவுசார் பொருளாதார துறைகளில் இளைஞர்கள் சிறந்து விளங்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
தொடர்ந்து, தமிழக அரசு மாபெரும் அளவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், திருக்குறளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில், அதை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் தெரிவித்தார்.