காவிரி ஆற்றில் மணல் கொள்ளை: வாகனங்களை சிறைப்பிடித்த இளைஞர்கள் – பரபரப்பு
கரூர் அருகே காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வந்த லாரி மற்றும் பொக்லைன் இயந்திரங்களை பொதுமக்கள் சிறைப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகழூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் தற்போது சுமார் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், அணை கட்டுமானம் மற்றும் பிற பணிகளுக்காக காவிரி ஆற்றிலிருந்து மணல் அள்ளப்பட்டு வருவதாக தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், மணல் அள்ளிக் கொண்டிருந்த லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரங்களை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், மணல் கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.